தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இன்றி நிற்க வைத்தே குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலிவுற்ற நோயாளிகளைச் செவிலியர் அறைக்கு வரவழைத்து, நிற்க வைத்த நிலையிலேயே அவர்களுக்கு மருந்து செலுத்தப்படும் காட்சிகள் மனிதாபிமானமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட செவிலியர் நோயாளிகளிடம் மிகவும் மரியாதையற்ற முறையில் நடந்து கொள்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவர் செல்வம் விளக்கம் அளிக்கையில், புகாருக்குள்ளான செவிலியர் மருத்துவமனையின் நிரந்தரப் பணியாளர் அல்ல என்றும், அவர் ஒரு திட்டப் பணியாளர் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிர் காக்கும் சிகிச்சையின் போது இத்தகைய அலட்சியப்போக்கு நிலவுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளிய மக்களின் நலன் கருதி, இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
