கள்ளக்குறிச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையிலேயே அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்குச் கன்னத்தில் அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமப்பேர் புறவழிச்சாலையில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு 108 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இதில் அதிமுக கொடியை ஏற்றி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அங்கு வந்திருந்தார்.

கொடியேற்றுவதற்கு முன்னதாக, அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்திக்கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் அல்லது இடநெருக்கடி காரணமாக ஆத்திரமடைந்த கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் பாபு, தனது அருகில் நின்றிருந்த மற்றொரு அதிமுக நிர்வாகியின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்முன்னே, கொடியேற்றும் வைபவத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கிருந்த தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைக் கண்ட எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிறிது நேரம் திகைத்து நின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.