பெங்களூரு மடிவாலாவில் உள்ள சந்தியா தியேட்டரில் பெண்கள் கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டருக்குச் சென்ற பெண் ஒருவர் கழிப்பறையைப் பயன்படுத்தியபோது, அங்கே சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் உடனடியாக இதுகுறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், அந்த செல்போனில் பெண்களின் அந்தரங்கக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த அருவருப்பான செயலில் ஈடுபட்டதாக தியேட்டரில் பணிபுரியும் ஒரு இளைஞரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞர் திட்டமிட்டு செல்போனை அங்கே மறைத்து வைத்தது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே, குறிப்பாக தியேட்டருக்கு வரும் பெண்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தியேட்டர் நிர்வாகம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள போலீசார், அந்த இளைஞர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.