வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் அன்னலேனா பேயர்போக்.

இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் என்பது உறுப்பு நாடுகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதற்கான ஒன்று அல்ல என்றும், அது சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய கட்டாய வழிகாட்டுதல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அமைதியான காலங்களிலும், தற்போது வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள ராணுவ நடவடிக்கை போன்ற நெருக்கடி நேரங்களிலும் சர்வதேச செயல்பாடுகளை நெறிப்படுத்தும் ஒரே கட்டமைப்பாக ஐ.நா. சாசனமே விளங்குகிறது என அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா. சாசனத்தின் 2-வது பிரிவின்படி, எந்தவொரு நாட்டின் அரசியல் சுதந்திரத்திற்கும் அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அச்சுறுத்தல் விடுப்பதையோ அல்லது படை பலத்தை பயன்படுத்துவதையோ உறுப்பு நாடுகள் தவிர்க்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

உலக ஒழுங்கு என்பது சட்டத்தின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வலிமையைப் பிரயோகிப்பதாக இருக்கக்கூடாது என அமெரிக்காவின் நடவடிக்கைக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் போது மட்டுமே பாதுகாப்பான மற்றும் நீதியான உலகம் சாத்தியப்படும் என்றும், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிப்பதே உலக அமைதிக்கு அடிப்படை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.