இயந்திர மனிதர்களுக்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகளை வழங்கும் “மின்னணு தோல்” தொழில்நுட்பம், எதிர்கால ரோபோக்களின் செயல்பாட்டில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த ‘நியூரோமார்பிக் இ-ஸ்கின்’ ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்களைக் கொண்டு மிக மெல்லிய படலமாகச் செயல்படுகிறது.
மேலும் மனித நரம்பு மண்டலம் மூளைக்குத் தகவல்களை அனுப்புவதைப் போலவே, இந்தச் செயற்கைத் தோல் தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை ரோபோவின் கணினிக்கு உடனுக்குடன் கடத்துகிறது. இதன் மூலம் ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இருக்காமல், ஒரு பொருளின் மென்மை அல்லது வலியை உணர்ந்து தற்காத்துக் கொள்ளும் திறனைப் பெறுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்; ஏனெனில் இவை திசுக்களின் அழுத்தத்தை நுணுக்கமாக உணர்ந்து செயல்பட உதவும். அதேபோல், முதியவர்கள் மற்றும் நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள் மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கையாளவும் இது வழிவகை செய்கிறது.
இதனால் செயற்கை நுண்ணறிவு எஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் இந்த மின்னணு தோல், ஒரு ரோபோ கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையைத் தொட்டாலும், அதன் வடிவம் மற்றும் தன்மையை வைத்து அது என்ன பொருள் என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் ஆற்றலை வழங்குகிறது. இதன் மூலம் ரோபோக்கள் மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் பாதுகாப்பான உதவியாளர்களாக மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை.
