உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 18 வயது மாணவி இல்மா நதீம், டெல்லி ராம் மனோகர் லோஹியா (RML) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனையில், அவரது மூளையில் சுமார் 20 முதல் 25 டேப்-வார்ம் (Tapeworm) எனப்படும் நாடாப் புழுக்களின் முட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ மொழியில் இது ‘நியூரோசிஸ்டிசர்கோசிஸ்’ (Neurocysticercosis) என்று அழைக்கப்படுகிறது.
இந்த உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள், தெருவோரக் கடைகளில் விற்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் சேர்க்கப்படும் சரியாகக் கழுவாத மற்றும் வேகவைக்காத முட்டைகோஸ் மூலம் இந்தப் புழுக்கள் மாணவியின் உடலுக்குள் சென்றுள்ளன.
செரிமான மண்டலத்திற்குள் செல்லும் இந்தப் புழுவின் லார்வாக்கள், ரத்தம் வழியாக மூளைக்குச் சென்று அங்கு முட்டையிட்டுத் தங்கிவிடும். மாணவிக்குத் தொடர்ந்து கடுமையான தலைவலி மற்றும் வலிப்பு (Seizures) ஏற்பட்டுள்ளது.
முட்டைகோஸ் போன்ற இலை காய்கறிகளைச் சமைக்கும் முன் நன்கு கொதிக்க வைத்த நீரில் போட்டுச் சுத்தம் செய்வது அவசியம். குறிப்பாகப் பச்சையாக முட்டைகோஸ் சேர்த்துச் செய்யப்படும் சாலட் மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதற்கு இந்த மாணவியின் மரணம் ஒரு சாட்சியாக மாறியுள்ளது.
