சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதை வாலிபரை வடபழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தார். கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அந்த மாணவி தனது வீட்டின் மாடிப் படிக்கட்டில் தனியாக அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாக
மாணவியைப் பிடித்து இழுத்து, அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்த மாணவி சத்தமிட்டு அலறியுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர், தப்பியோட முயன்ற அந்த வாலிபரை விரட்டிப் பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவருக்குத் தர்ம அடி கொடுத்து, வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கவுதம் (23) என்பது தெரியவந்தது. இவர் நேற்று காலை முதலே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, போதையில் சுற்றியுள்ளார். நள்ளிரவு கொண்டாட்டத்தின் போது போதை தலைக்கேறிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கவுதம் மீது வழக்குப் பதிவு செய்த வடபழனி போலீசார், அவரை கைது செய்தனர். புத்தாண்டு தினத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இத்தகைய சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
