கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, சடலத்தைத் தண்டவாளத்தில் வீசிய மனைவி போலீசில் சரணடைந்தார். மதுரையைச் சேர்ந்த தேவா (எ) ரித்தீஷ் (27), கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளத்தில் தனது மனைவி இந்திராணி (26) மற்றும் 3 வயது மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 26-ஆம் தேதி தேவா திடீரென மாயமானதாக அவரது தாய் சுசீலா அளித்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று இந்திராணி காவல் நிலையத்தில் சரணடைந்தார். தனது கணவரைக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
“எனக்கும் எனது சித்தப்பா வினோத்குமாருக்கும் (41) கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனை அறிந்த தேவா எங்களைக் கண்டித்தார். இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 28-ஆம் தேதி இரவு வினோத்குமாரையும் அவரது நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, தேவாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்தோம்.”
கொலைக்குப் பிறகு கொலையாளிகள் அரங்கேற்றிய நாடகம் போலீசாரையே அதிரவைத்துள்ளது. கரூரில் இருந்து ஒரு தனியார் ஆம்புலன்ஸை வரவழைத்து, நள்ளிரவில் தேவாவின் சடலத்தை அதில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் கரூர் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் சடலத்தைப் போட்டுவிட்டு, அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போலச் சித்தரித்துள்ளனர்.
மறுநாள் காலையில் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், அது விபத்து எனக்கருதி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவா மாயமான வழக்கில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்தப் பகுதிக்கு நள்ளிரவில் ஆம்புலன்ஸ் வந்து சென்றது உறுதியானது. ஆம்புலன்ஸ் குறித்துப் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டதை அறிந்த இந்திராணி, தப்பிக்க முடியாது என உணர்ந்து போலீசில் சரணடைந்தார்.
கைது செய்யப்பட்ட இந்திராணியைக் கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் எப்படிக் கொலை செய்தார் என்பதை நடித்துக் காட்டச் செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் வினோத்குமார் மற்றும் அவருக்கு உதவிய கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
