மனைவி கணவரை விட அதிகமாகச் சம்பாதித்தாலும், தனது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து ஒரு தந்தை தப்பிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வருமானத்தில் வித்தியாசம் இருந்தாலும், குழந்தைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பது ஒரு தந்தையின் சட்டப்பூர்வமான மற்றும் தார்மீகக் கடமை என்று நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா தெரிவித்துள்ளார். தனது மூன்று குழந்தைகளுக்குத் தலா 10,000 ரூபாய் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஒரு தந்தை தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த நபர் தனது மாத வருமானம் வெறும் 9,000 ரூபாய் என்றும், ஆனால் தனது மனைவி 34,500 ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறி, இந்தத் தொகையை வழங்கத் தனக்கு வசதியில்லை என்று வாதிட்டார். இருப்பினும், 2014-ல் திருமணமான இந்தத் தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் நிலையில், குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளைத் தாய் மட்டுமே சுமக்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மனைவியின் வருமானம் அதிகமாக இருப்பதால் தந்தையின் பொறுப்பு குறைந்துவிடாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
