காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேராவின் மகன் ரைஹான் வதேராவிற்கும், டெல்லியைச் சேர்ந்த அவிவா பேக் என்ற பெண்ணிற்கும் நாளை ராஜஸ்தானின் ரந்தம்பூரில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த இவர்கள், சமீபத்தில் தங்கள் காதலைப் பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு குடும்பத்தினரும் இவர்களின் திருமணத்திற்குப் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து, ரந்தம்பூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்த விழா விமரிசையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணமகள் அவிவா பேக் டெல்லியைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் மற்றும் ‘Atelier 11’ என்ற ஸ்டுடியோவின் இணை நிறுவனர் ஆவார். இவரது தந்தை இம்ரான் பெக் ஒரு தொழிலதிபர்.

ரைஹான் வதேராவும் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர் என்பதால், ஒரே துறையைச் சேர்ந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. இன்று நிச்சயதார்த்தம் முடிவடைந்தவுடன், இவர்களது திருமணத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.