காசோலை (செக்) மோசடி வழக்கில், மதிமுக கட்சியைச் சேர்ந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமாருக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள டாக்டர் சதன் திருமலை குமார், கடந்த 2016ஆம் ஆண்டு, தனது தொழில் முன்னேற்றத்திற்காக சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ‘நியூ லிங் ஓவர்சீஸ்’ நிதி நிறுவனத்திடம் இருந்து 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதற்காக, அவர் தலா ரூ.50 லட்சம் மதிப்புள்ள இரண்டு காசோலைகளை அந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். ஆனால், அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, வங்கி கணக்கில் போதிய தொகை இல்லை என்ற காரணத்தால் காசோலைகள் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டு, நியூ லிங் ஓவர்சீஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர், டாக்டர் சதன் திருமலை குமாருக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

சட்டமன்ற உறுப்பினர் என்பதால், இந்த வழக்கு பின்னர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரபாண்டியன், சதன் திருமலை குமாருக்கு எதிரான காசோலை மோசடி குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, டாக்டர் சதன் திருமலை குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும், மேலும் 1 கோடி ரூபாய் தொகையை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அவ்வாறு செலுத்தத் தவறினால், மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய இரண்டு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், அதுவரை சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.