திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மாட்டுப்பட்டி கிராமத்தில், மனோராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகிலுள்ள சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற நிலையில், அது திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு மனோராம் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், அருகிலுள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அந்தக் காட்சிகளில், மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி பயன்படுத்தி, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. இதுகுறித்து அவர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, மர்ம நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சமீப காலமாக இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது, அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பாதுகாப்பு குறித்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
