சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமம், வினோதமான மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அபராதம் வசூலிப்பதாக அறிவித்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த புதிய விதிகளின்படி, அந்த மாகாணத்திற்கு வெளியே உள்ள ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் சுமார் 1,500 யுவான் (சுமார் 210 டாலர்) அபராதமாகச் செலுத்த வேண்டும்.

மேலும், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைதல், திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்தல் மற்றும் வதந்திகளைப் பரப்புதல் போன்ற செயல்களுக்கும் பெரும் தொகை அபராதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமணமான 10 மாதங்களுக்குள் குழந்தை பெற்றெடுத்தால் கூட 3,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வினோதமான கட்டுப்பாடுகள் அடங்கிய அறிவிப்புப் பலகை சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இதற்குப் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கிராம நிர்வாகக் குழு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவிற்கும் மாகாண அரசாங்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இது சர்ச்சைக்குரிய இந்த அறிவிப்புப் பலகை தற்போது அகற்றப்பட்டிருந்தாலும், தனிமனித உரிமைகளில் தலையிடும் வகையில் இதுபோன்ற விதிகள் வகுக்கப்பட்டது பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மது அருந்திவிட்டு தகராறு செய்தல் அல்லது தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சண்டையைத் தீர்க்க அதிகாரிகளை அழைத்தால் கூட அபராதம் வசூலிக்கப்படும் போன்ற விதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.