சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள இரு பிரபல வணிக வளாகங்கள், கழிவறைகளில் புகைப்பிடிப்பதைத் தடுப்பதற்காக ஒரு விசித்திரமான மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளன. அங்குள்ள ஆண்களுக்கான கழிவறை கதவுகளில் சிறப்பு வகை கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை யாராவது உள்ளே புகைப்பிடித்தால் அடுத்த சில நொடிகளிலேயே தானாகவே வெளிப்படையாகத் தெரியும் வகையில் மாறுகின்றன.

மேலும் புகை பிடிக்கும்போது வெளியாகும் புகையை உணர்ந்தவுடன் இந்த கண்ணாடித் திரை மறைந்து போவதால், உள்ளே இருப்பவர் வெளியே இருப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரிவார். “நீங்கள் இணையத்தில் பிரபலமாக விரும்பவில்லை என்றால், புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்” என்ற எச்சரிக்கை வாசகமும் அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சி சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த வழி என்று பலரும் பாராட்டியுள்ள நிலையில், இது தனிமனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று ஒரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இயந்திரக் கோளாறு காரணமாகவோ அல்லது தெரியாமலோ கண்ணாடி வெளிப்படையானால் அது தர்மசங்கடமான சூழலை உருவாக்கும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், தொழில்நுட்பத்தின் மூலம் பொது ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வைக்கும் சீனாவின் இந்த முயற்சி தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.