தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதற்கு முன்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தி.மு.க. தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சர் முதல் கட்சியின் அனைத்து தலைவர்களும் தொடர்ந்து மக்களை சந்தித்து கூட்டங்கள் நடத்திக் கொண்டு வரும் இயக்கம் தான் தி.மு.க. ஆகும்.

தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் அதற்கு முன்பாகவே மகளிர் மற்றும் இளைஞர்களை சந்திக்கும் பல்வேறு கூட்டங்களை தி.மு.க. தொடர்ந்து நடத்திக் கொண்டே வருகிறது.

இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதாக கூறப்படும் கருத்துகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்தியா கூட்டணி உடையும் என்று கனவு காண்கிறார். கனவு காண்பது தவறல்ல; அவர் கனவு காண்பதைக் தொடரட்டும்.

ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.