உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர், கார் ஓட்டுநரை மிகவும் ஆபாசமாகவும் இழிவாகவும் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் பரபரப்பான பாம்பே பஜார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில், ரத்னா ரதி என்ற அந்த அதிகாரி தனது காரில் சிக்கியுள்ளார்.

அப்போது தனக்கு முன்னால் சென்ற காரின் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், பொதுவெளியில் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதுடன், “நான் ஒரு போலீஸ் அதிகாரி, உன் வாயிலேயே சிறுநீர் கழிப்பேன்” என்று மிரட்டியது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

“>

இந்தச் சம்பவத்தின் போது, காரில் இருந்த பெண்ணிடமும் அவர் தவறாக நடந்து கொண்டதோடு, ஓட்டுநரை பெல்ட்டால் அடிப்பேன் என்றும் சிறைக்கு அனுப்புவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அலிபார்க்கில் பணியாற்றும் அந்த அதிகாரி நீதிமன்றப் பணிக்காக மீரட் வந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரின் இத்தகைய அராஜகப் போக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து இன்னும் முறையான புகார் அளிக்கப்படவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.