சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த 36 வயது லி ஜியா என்ற நபர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் செயலிழந்த நிலையிலும், ஒரு விரல் மற்றும் ஒரு கால் விரலை மட்டுமே பயன்படுத்தி நவீன தொழில்நுட்பப் பண்ணையை உருவாக்கி உலகையே வியக்க வைத்துள்ளார்.
5 வயதில் தாக்கிய கொடிய நோயால் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய லி ஜியா, இயற்பியல் மற்றும் கணினி அறிவியலில் இருந்த ஆர்வத்தால் சுயமாகப் பயின்று மென்பொருள் நிரலாக்கத்தைக் கற்றுக்கொண்டார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கோமா நிலைக்குச் சென்று மீண்ட பிறகு, செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் வாழ்ந்து வரும் அவர், இணைய வழித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது படுக்கையிலிருந்தே ஒரு முழுமையான பண்ணைக் கட்டுப்பாட்டு அமைப்பை வடிவமைத்துள்ளார். இந்த அரிய சாதனையில் அவருக்குப் பக்கபலமாக அவரது தாய் வு டிமெய் இருந்து வருகிறார்.
மகனின் வழிகாட்டுதலின்படி, எலக்ட்ரானிக் கருவிகளைப் பொருத்துதல், மின்சுற்றுப் பலகைகளை உருவாக்குதல் மற்றும் தானியங்கி வாகனங்களை இயக்குதல் எனத் தொழில்நுட்பப் பணிகளை அவர் கற்றுக்கொண்டு மகனுக்கு உதவியாகச் செயல்படுகிறார். தற்போது லி ஜியாவின் நவீனப் பண்ணை லாபகரமாக இயங்கி வருவதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது.
உடல் ஊனம் ஒரு தடையல்ல என்பதைத் தனது விடாமுயற்சியால் நிரூபித்துள்ள லி ஜியா, தற்போது செர்ரி தக்காளி போன்ற புதிய பயிர்களை விளைவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இவரது இந்த மன உறுதி மற்றும் குடும்பத்தின் ஆதரவு சீன மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
