மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த கப்பல் இன்ஜினியருக்கும், மருத்துவரான இளம்பெண் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல், திருமணமான 24 மணிநேரத்திலேயே விவாகரத்தில் முடிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டதாகக் கருதி பெரியவர்களின் சம்மதத்துடன் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் முடிந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே இருவருக்கும் இடையே சித்தாந்த ரீதியிலான கருத்து வேறுபாடுகளும், வாழ்க்கை முறை குறித்த முரண்பாடுகளும் முளைத்துள்ளன.

ஒருமித்த கருத்தை எட்ட முடியாத நிலையில், இருவரும் சற்றும் தாமதிக்காமல் பிரியும் முடிவை எடுத்தனர். குறிப்பாக, கணவர் கப்பலில் பணிபுரிவதால் அவர் எப்போது ஊர் திரும்புவார் அல்லது எவ்வளவு காலம் பிரிந்து இருக்க நேரிடும் என்பதில் மனைவிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கிடையே வன்முறையோ அல்லது குற்றச்சாட்டுகளோ இன்றி, பரஸ்பர சம்மதத்துடன் இந்த விவாகரத்து கோரப்பட்டது.

இது பொதுவாக இந்தியாவில் விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வர நீண்ட காலம் எடுக்கும் என்றாலும், இந்த தம்பதியினர் திருமணமான 24 மணிநேரத்திலேயே தனித்தனியாக வாழத் தொடங்கிவிட்டதை நீதிமன்றம் கருத்தில் கொண்டது. இருவரின் எதிர்கால நலனைக் கருதி, நீதிமன்றம் விரைவாக இவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இருவருட காதல் ஒரே நாளில் கசந்து போனது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.