ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகன் விஜயின் கடமை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைவதே விஜய்க்கு பாதுகாப்பு என்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்து உண்மையெனவும் அவர் கூறினார்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகளான தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “அண்ணன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதில் பெருமை கொள்கிறேன். என்னை ‘தங்கச்சி’ என்று அழைப்பார். அவ்வாறு அழைக்கும் அரசியல்வாதிகளில் விஜயகாந்த் முதன்மையானவர். அவர் வெள்ளந்தியான மனிதர்; அரசியலில் நேர்மையாக இருந்தவர்”
என்று நினைவுகூர்ந்தார்.

மேலும், “விஜயகாந்த் பிரதமர் நரேந்திர மோடி மீது அன்புடன் இருந்தவர். தமிழ்நாட்டில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே அவரது கனவு. அது நிறைவேற வேண்டும். விஜய் எங்களோடு வருவதுதான் அவருக்கு பாதுகாப்பு என்ற நயினார் நாகேந்திரனின் கருத்து யதார்த்தமான உண்மை” என்று தெரிவித்தார்.

“ஜனநாயக முறையில் முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரியக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது” என்றும் அவர் கூறினார். இதனிடையே, பாஜகவை கொள்கை எதிரியாக விஜய் அறிவித்திருந்தாலும், பாஜக தரப்பில் தொடர்ந்து அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.