சென்னையில் உள்ள DPI வளாகத்தில் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகத் தகவல் பரவியது. இதைத் தடுப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களைப் போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதனால் போராட்டக் களத்தில் ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. தங்களது நீண்ட காலக் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என ஆசிரியர்கள் பிடிவாதமாக இருப்பதால், அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது.
