புனே மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு அங்கு அரங்கேறியுள்ள ஒரு பரபரப்பான அரசியல் நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பேரன் ஆயுஷ் கோம்கர் கொலை வழக்கில் கைதாகி எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 70 வயதான தாதா சூரியகாந்த் பந்து அந்தேகர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் செய்ய அழைத்து வரப்பட்டார்.
குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திடம் சிறப்பு அனுமதி பெற்ற அவர் கைகள் கட்டப்பட்ட நிலையிலும் முகம் கறுப்புத் துணியால் மூடப்பட்ட நிலையிலும் கொண்டு வரப்பட்டார். வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள புனே மாநகராட்சித் தேர்தலில் பவானி பெத் பகுதியில் சுயேச்சை வேட்பாளராக அவர் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது மருமகள் சோனாலி அந்தேகர் மற்றும் மைத்துனி லக்ஷ்மி அந்தேகர் ஆகியோரும் நீதிமன்ற அனுமதியுடன் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டபோது சூரியகாந்த் தனக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு முக்கிய கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வரிசையாகத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள இந்த அரசியல் முன்னெடுப்பு புனே வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
