வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய மற்றொரு பாரிய சிக்கலாக கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாடு உருவெடுத்துள்ளது. மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மறைவுக்குப் பிறகு வங்காளதேசத்தில் வன்முறையும் பதற்றமும் நீடித்து வரும் நிலையில், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

அங்குள்ள குடும்பக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DGFP) வழங்கி வரும் ஐந்து வகையான கருத்தடை சாதனங்களின் இருப்பு மிக வேகமாகத் தீர்ந்து வருவதாக ‘தி டெய்லி ஸ்டார்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் ஒரு மாத காலத்திற்கு ஆணுறைகள் (Condoms) உள்ளிட்ட எந்தவொரு கருத்தடை சாதனங்களையும் விநியோகிக்க முடியாத சூழல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி, பணியாளர் தட்டுப்பாடு மற்றும் கொள்முதல் செய்வதில் உள்ள சட்ட சிக்கல்கள் போன்ற காரணங்களால் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆணுறை விநியோகம் 57% வரை குறைந்துள்ளது. இந்தத் தட்டுப்பாடு காரணமாக, வங்காளதேசத்தின் மொத்த மகப்பேறு விகிதம் (Total Fertility Rate) கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் 2.3 ஆக இருந்த இந்த விகிதம், தற்போது 2.4 ஆக அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கருத்தடை சாதனங்கள் தாராளமாகக் கிடைக்காததும், களப்பணியாளர்கள் பற்றாக்குறையும் இந்த நிலைக்குக் காரணம் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால், ஏற்கனவே வறுமை மற்றும் அரசியல் நெருக்கடியில் இருக்கும் வங்காளதேசத்திற்கு இது நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.