நொய்டாவில் ரத்த உறவுகளுக்குள்ளேயே நடந்த அத்துமீறல் ஒரு இளம் பெண்ணின் உயிரைப் பறித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் நொய்டாவின் செக்டர்-39 பகுதியில் வசித்து வந்தது. அங்கு அதே வீட்டில் வசித்த தனது பெரியப்பா மகன் அரவிந்த் என்பவருடன் 18 வயது இளம்பெண்ணுக்குத் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.
இதில் அந்தப் பெண் கர்ப்பமடையவே, விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் எனப் பயந்த அரவிந்த், அந்தப் பெண்ணுக்கு ரகசியமாக கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரைகளை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.
மாத்திரையின் வீரியத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஊசலாடிய அந்தப் பெண்ணை, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, கடந்த டிசம்பர் 23-ம் தேதி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவர்களின் முதற்கட்ட சோதனையில், கருக்கலைப்பு மாத்திரையினால் ஏற்பட்ட அதிகப்படியான ரத்த இழப்பே மரணத்திற்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்தது.
மகளின் மரணத்தால் உடைந்துபோன பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த பெரியப்பா மகன் அரவிந்தை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நொய்டா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
