மும்பை மலாடு பகுதியில் உள்ள மால்வாணி என்ற இடத்தில், மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த 12 வயது பள்ளி மாணவியிடம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதட்டில் ஏற்பட்ட கொப்புளத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காகச் சென்ற அந்தச் சிறுமியை, பரிசோதனை என்ற பெயரில் படுக்கையில் படுக்க வைத்த அந்த மருத்துவர், அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் மால்வாணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து 44 வயதான அந்தப் பெண் மருத்துவரை மால்வாணி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மருத்துவர் தற்போது காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்துக் கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மருத்துவரே இத்தகைய செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
