மத்திய அரசின் பி.எம் கிசான் (PM KISAN) திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இது மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் இடுபொருட்களின் விலை மற்றும் விவசாயச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் பல்வேறு விவசாய அமைப்புகள் நீண்டகாலமாக மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தன.

​இந்நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தவணைத் தொகையையும் 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு உயர்த்தப்பட்டால், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் 9,000 ரூபாய் நிதி உதவி கிடைக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஒட்டுமொத்த விவசாய சமூகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.