தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார். அப்போது, மற்ற மாநிலங்களில் உள்ளவர்களே வியக்கும் வகையில் விஜய் மக்கள் சேவையாற்ற முன்வந்திருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

ஒரு படத்திற்கு 250 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் நிலையிலும், அந்தப் பணத்தை விட மக்கள் சேவையே முக்கியம் என்று விஜய் அரசியலுக்கு வந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மண்ணைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பும், இளைஞர்களின் எழுச்சியும் தவெகவிற்குப் பின்னால் இருப்பதாக அவர் கூறினார்.

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அக்கட்சி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்த செங்கோட்டையன், வரும் பொங்கல் பண்டிகைக்குள் முன்னாள் அமைச்சர்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகவும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.