ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்று மான்டி பனேசர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தலைமையிலான ‘பாஸ்பால்’ அணுகுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வீழ்த்தும் யுக்தி தெரிந்த ரவி சாஸ்திரி இங்கிலாந்து அணிக்குச் சரியான தேர்வாக இருப்பார் என பனேசர் தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை டெஸ்ட் தொடர்களை வென்று வரலாறு படைத்ததை மான்டி பனேசர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பலவீனங்களைப் புரிந்து கொண்டு, அவர்களைத் தந்திரமாக வீழ்த்த ரவி சாஸ்திரியால் மட்டுமே முடியும் என அவர் நம்புகிறார்.
2025 ஆஷஸ் தொடரின் படுதோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது தலைமைத்துவத்தை மாற்ற வேண்டும் என்ற விவாதங்கள் வலுத்துள்ள நிலையில், ஒரு இந்தியரை இங்கிலாந்து அணிக்குப் பரிந்துரை செய்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
