இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹிகா சர்மாவுடன் இரவு உணவு முடித்துத் திரும்பும்போது, ரசிகர் ஒருவர் அவமதிக்கும் வகையில் பேசியும் அமைதி காத்து கண்ணியத்துடன் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து ஹர்திக் பாண்டியாவும் மஹிகா சர்மாவும் வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றனர்.

 

அப்போது கூட்ட நெரிசலில் ஒரு ரசிகரால் புகைப்படம் எடுக்க முடியாததால் ஆத்திரமடைந்த அவர், பாண்டியாவை நோக்கி மிகவும் அநாகரீகமான வார்த்தையைப் பயன்படுத்தி கத்தியுள்ளார். இருப்பினும், அந்தப் பேச்சைக் காதில் வாங்காதது போலவே தனது காதலியைப் பாதுகாப்பாகக் காரில் ஏற்றிவிட்டு, பின்னர் மற்ற ரசிகர்களுடன் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இக்கட்டான சூழலிலும் நிதானம் தவறாமல் முதிர்ச்சியுடன் நடந்துகொண்ட பாண்டியாவின் இந்தச் சமயோசித செயலை கிரிக்கெட் ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.