கடல்களில் பரவி வரும் மாசுபாடு, எதிர்காலத்தில் கடல்வாழ் உயிரினங்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அதிகரித்து வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட அரிய வகை மீனை ஒருவர் காப்பாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், மீன்பிடி வலைகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகள் கடலில் கலப்பதால், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஒரு மனிதன் அரிய வகை மீனின் வாயில் சிக்கிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் காட்சி இடம்பெற்றுள்ள வீடியோ, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், வாயிலிருந்து நீண்ட கொக்கு போன்ற அமைப்புடன் காணப்படும் ஒரு மீன் கடற்கரைக்கு வந்திருப்பதும், அதன் கூர்மையான கொக்கில் பிளாஸ்டிக் துண்டுகள் சிக்கியிருப்பதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து, ஒருவர் கவனமாக அந்த பிளாஸ்டிக் துண்டுகளை வெட்டி அகற்றுகிறார். பிளாஸ்டிக் அகற்றப்பட்டதும், அந்த மீன் சிரமமின்றி மீண்டும் கடலுக்குள் செல்கிறது.

இந்த விசித்திரமான தோற்றமுடைய மீன், உலகின் மிகவும் அரிதான மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான ‘சாஃபிஷ்’ (Sawfish) என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், இந்த வகை மீன் 10 முறைக்கும் குறைவாகவே காணப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 41 வினாடி காணொளி, சமூக ஊடக தளமான எக்ஸ் இல் @oceaiii என்ற பயனர் பெயரில் பகிரப்பட்டுள்ளது. “புலிகளை விடவும் அதிகமாக அழிந்து வரும் உயிரினங்களில் சாஃபிஷ் ஒன்றாக உள்ளது. ஒரு தசாப்தத்தில் 10 முறைக்கும் குறைவாகவே இவை காணப்படுகின்றன” என்ற வாசகமும் அந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளதுடன், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் கருத்துகள் மூலம் தங்களது ஆதங்கத்தையும் பாராட்டையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“இப்படியான மீனை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதுடன், “மீன்பிடிக்கும் போது அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாப்பது அனைவரின் கடமை” என மற்றொருவர் தெரிவித்துள்ளார். சிலர், மீனுக்கு உதவிய அந்த மனிதரின் மனிதநேய செயலை பாராட்டியும் கருத்து பதிவிட்டுள்ளனர்.