இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் வசித்து வரும் மனுரங் குடும்பத்தினர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை மரபணு குறைபாட்டைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சமூக வலைதளங்கள் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதர, சகோதரிகளில் நான்கு பேருக்கு முக அமைப்பை மாற்றியமைக்கும் ‘டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம்’ எனும் அரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது ஒரு சாபம் என்று உள்ளூர் மக்களால் தவறாகக் கருதப்பட்ட நிலையில், உண்மையில் இது தங்களது தந்தையிடமிருந்து பரம்பரையாகத் தொடரும் ஒரு மருத்துவப் பாதிப்பு என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் பொதுவெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கிய இந்தக் குடும்பத்தினர், பின்னர் அந்தத் தடைகளை உடைத்து டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் சவால்களை வீடியோக்களாகப் பகிரத் தொடங்கினர்.

தற்போது இவர்களை லட்சக்கணக்கானோர் பின்தொடர்வதுடன், இவர்களது தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் பாராட்டி வருகின்றனர். முகத் தோற்றம் மட்டுமே ஒருவரது அடையாளமல்ல என்பதை நிரூபித்துள்ள மனுரங் குடும்பத்தினர், ஊனத்தைத் தாண்டி உளவலிமையால் சாதிக்க முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர்.