தூத்துக்குடியில் உள்ள ஓட்டல் ஒன்றில், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக வைக்கப்பட்டிருந்த கியூஆர் கோடு (QR Code) சாதனத்தின் மீது தனது சொந்த வங்கிக் கணக்கின் கியூஆர் ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் உரிமையாளரின் கணக்கிற்கு வராமல் போனதையடுத்து, கியூஆர் சாதனத்தைச் சோதித்தபோது அதன் மேல் வேறொருவரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்துத் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் (NCRP) அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப ரீதியான ஆய்வில், இந்த மோசடியில் ஈடுபட்டவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த முருகானந்தம் (26) என்பது தெரியவந்தது. தூத்துக்குடி பள்ளிவாசல் பஜார் பகுதியில் பதுங்கியிருந்த அவரைச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முருகானந்தம் இதுபோன்று வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறு வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளில் உள்ள கியூஆர் கோடுகளைத் அவ்வப்போது சோதித்து, இது போன்ற நூதன மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.