டோக்கியோ: மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தவளை மற்றும் பல்லிகளின் குடலில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா, புற்றுநோய் கட்டிகளை வேரோடு அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஜப்பானின் நாகோயா பல்கலைக்கழகம் மற்றும் ஜப்பான் மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ‘ஈவிங்கெல்லா அமெரிக்கானா’ எனப்படும் பாக்டீரியா, மனிதர்களுக்கு ஏற்படும் கொடூரமான குடல் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பது தெரியவந்துள்ளது.

தவளைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் செரிமான மண்டலத்தில் இயற்கையாக வாழும் இந்த பாக்டீரியா, புற்றுநோய் கட்டிகளுக்குள் ஊடுருவி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கிறது. இந்த சிகிச்சை முறை வழக்கமான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை விட அதிக செயல்திறன் கொண்டது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள புற்றுநோய் சிகிச்சைகளான கீமோதெரபி போன்றவை கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும் நிலையில், இந்த பாக்டீரியா வழி சிகிச்சை நோயாளிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வக சோதனையில், இந்த பாக்டீரியாவை உடலில் செலுத்திய 24 மணி நேரத்திற்குள் அது இரத்த ஓட்டத்தில் இருந்து மறைந்து விடுவதும், 72 மணி நேரத்திற்குள் உடலின் வீக்கங்கள் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதும் கண்டறியப்பட்டுள்ளது.

குடல் புற்றுநோயைத் தவிர, மார்பகப் புற்றுநோய் மற்றும் கணையப் புற்றுநோய் போன்ற பிற புற்றுநோய்களுக்கும் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துவது குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த புதிய கண்டுபிடிப்பு, வலி இல்லாத மற்றும் குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.