திருமணம் மற்றும் உறவுகள் குறித்த சமூக அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டனின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 32 வயதான பெக்கி என்ற இளம்பெண் தனது தனிமை மற்றும் மனவேதனை குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திட்ட மேலாளராகப் பணியாற்றும் பெக்கி, கடந்த 15 ஆண்டுகளாகத் தான் ஒரு உறவில் கூட இல்லாமல் தனிமையில் இருப்பதாகவும், பலமுறை முயன்றும் தனக்கான துணையைத் தேடுவதில் தோல்வியே மிஞ்சியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
நீண்ட காலம் தனிமையில் இருக்கும்போது, தன்னிடம் தான் ஏதோ குறை இருப்பதாகத் தோன்றத் தொடங்கும் என்று கூறும் அவர், இதுவரை ஒரு ஆண் கூட தன்னிடம் ‘உன்னை எனக்குப் பிடிக்கும்’ என்று சொன்னதில்லை எனவும், உண்மையான அன்பு என்றால் என்னவென்றே தனக்குத் தெரியாது என்றும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
பெக்கியின் இந்த வேதனைக்கு அவரது உடல்நலப் பாதிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு ‘மல்டிபிள் ஸ்களீரோசிஸ்’ எனும் தீவிர நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் அவரது உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய நபர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அவர் பெரும் அச்சம் கொள்கிறார்.
தன்னை ஒரு சக மனிதராகப் பார்க்காமல், நோயாளியாக மட்டுமே பார்ப்பார்களோ என்ற பயம் தனக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காலையில் தனிமையில் கண்விழிப்பது வேதனையாக இருந்தாலும், தகுதியற்ற உறவுகளில் சிக்கித் தவிப்பதை விடத் தனிமையே பாதுகாப்பானது என்று அவர் கூறியுள்ளார்.
நீண்ட காலம் தனிமையில் இருப்பவர்கள் தங்களைத் தாழ்வாகக் கருத வேண்டாம் என்றும், சமூகத்தின் கால அட்டவணைப்படி வாழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தனது வீடியோவில் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார்.
