தமிழக வெற்றிக் கழகம் ஒரு தூய கட்சி அல்ல, அது பல்வேறு கட்சிகளிலிருந்து வந்த சந்தர்ப்பவாதிகள் நிறைந்த ஒரு ‘கலப்படக் கட்சி’ என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற அதிமுக இணைப்பு விழாவில் பேசிய அவர், பதவிக்காகவும் வசதிக்காகவும் கட்சி மாறுபவர்கள் தவெக-வில் இணைந்துள்ளதாகக் கூறினார்.
குறிப்பாக, அதிமுகவில் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துவிட்டு, இப்போது விஜயை ‘புரட்சித் தளபதி’ என்று அழைப்பவர்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு வெட்கம் இல்லையா என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பிக்கும்போது ரசிகர்களை மட்டும் கொண்டிருந்தால் அது தனித்துவமாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது மற்ற கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், வாய்ப்பு தேடி அலைபவர்களும் அங்கு குழுமியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளிடம் நடிகர் விஜய் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், தவெக-வின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் என்னவென்றே தெரியாத நிலையில் அதைத் தூய்மையான கட்சி என்று சொல்வதை ஏற்க முடியாது என்றும் கே.பி.முனுசாமி வலியுறுத்தினார்.
