செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட மிகத் தத்ரூபமான புலித் தாக்குதல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் தனது வாகனத்திலிருந்து கீழே இறங்கும் போது, புதர் மறைவிலிருந்து பாய்ந்து வந்த புலி ஒன்று அவரைத் தாக்கித் தரையில் தள்ளி முகத்தைக் குதறுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

 

பின்னணியில் மக்கள் அலறும் சத்தமும் கேட்கப்படுவதால் இது காட்டில் சுற்றுலா சென்றபோது நடந்த உண்மையான சம்பவம் என்று பலரும் நம்பி இதனைப் பகிர்ந்து வருகின்றனர். சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, உண்மையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை வீடியோ ஆகும்.

இவ்வளவு தத்ரூபமாக உண்மையை மறைக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் இணையவாசிகள், காடு போன்ற தனிமையான இடங்களுக்குச் செல்லும் போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த வீடியோ நினைவூட்டுவதாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.