ஜார்க்கண்ட் மாநிலம், பால்ஜோரி கிராமத்தைச் சேர்ந்த படிம்பா சதோம்பா என்பவர், தனது 4 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சைபாஸா சதார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. தனது குழந்தையின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் படிம்பா பலமுறை கோரிக்கை வைத்துள்ளார்.

​ஆனால், பல மணி நேரம் காத்திருந்தும் மருத்துவமனை தரப்பில் எந்த வாகன வசதியும் செய்து தரப்படவில்லை. மகனை இழந்த துக்கத்தில் இருந்த அந்தத் தந்தை, வேறு வழியின்றி ஒரு கடையிலிருந்து துணியால் ஆன ‘கட்டப்பை’ ஒன்றை வாங்கினார். தனது பிஞ்சு மகனின் உடலை அந்தக் கட்டப்பைக்குள் வைத்துச் சுமந்தபடி மருத்துவமனையிலிருந்து வெளியேறிச் சென்றார். இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.