திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், தமிழக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பின் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில், அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்தார்.
இறந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளை நீக்கியது வரவேற்கத்தக்கது என்றாலும், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்கியதை ஏற்க முடியாது என்றும், இதனை ஜனவரிக்குள் தேர்தல் ஆணையம் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கக் கோருவோம் என்றும், அதில் 5 தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்துவோம் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
