தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசனின் மகள் காவியா (17), தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் (Anaesthesia Technology) பயின்று வந்தார்.
பள்ளிப் படிப்பைத் தமிழ் வழியில் முடித்திருந்த காவியாவுக்கு, மருத்துவப் பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்ததால் அவற்றைப் புரிந்துகொண்டு படிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துத் தனது பெற்றோரிடம் அவர் பலமுறை மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பெற்றோரோ அவருக்கு ஊக்கமளிக்கும் வகையில், “உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்” எனக் கூறிப் படிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், கல்வியில் ஏற்பட்ட தொடர் சிரமத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான காவியா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்துத் தர்மபுரி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
