ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், நடிகரும் தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவருமான விஜய், திமுகவை “தீய சக்தி” என்றும், தவெகவை “தூய சக்தி” என்றும் விமர்சித்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக அமைந்துள்ளது.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விஜயின் இந்த விமர்சனத்திற்கு கடுமையாக பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:

“திமுக தீய சக்தி அல்ல. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. மக்கள் சக்தி என்றால் என்ன என்பதே விஜய்க்கு தெரியாது. அவர் சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடமே உள்ளது.

விஜய்க்கு சிலப்பதிகாரம் கூட தெரியாது. அவருக்காக எழுதிக் கொடுப்பவர்களுக்குத்தான் எல்லாம் தெரியும். அவரைப் பொறுத்தவரை, அவர் நினைப்பது எந்த காலத்திலும் நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராகுவது சினிமாவில் மட்டுமே நடக்கும்; அரசியலில் அது சாத்தியமில்லை.

எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜயால் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. அவர் சினிமா பாணியில் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் 500 பேரை அடிப்பார்; அதுபோல தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்போல் நாங்கள் இல்லை. விஜய் பாஜகவின் ‘சி டீம்’” என்றார்.