உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் இல்லத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தெரு நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தரையின் மீது அந்த நாய் நடந்து சென்றதால், தரை சேதமடைந்ததாகக் கூறி இந்த கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அந்த காவலர் நாயைத் துரத்திச் சென்று சுடுவதும், அருகில் இருப்பவர் அவரைத் தூண்டிவிடுவதும் பதிவாகியுள்ளது. வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செயலில் ஈடுபட்ட காவலர் ராஜேந்திர பாண்டே என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. நாயைக் கொன்றது சட்டப்படி குற்றம் என்றும், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

“>

 

இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கச் சென்றபோது அங்கிருந்த காவல்துறை அதிகாரி தங்களை மிரட்டியதாக விலங்கு நல ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சிறிய காரணத்திற்காக விலங்கு கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் மனிதநேயமற்ற செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.