கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில், கர்ப்பிணிப் பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஜூன் மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில், ஷைமோல் என்ற பெண் தனது கணவர் பெஞ்சோ பேபி காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதைக் குறித்துக் கேட்க காவல் நிலையம் சென்றுள்ளார்.

 

அப்போது அங்கு பணியிலிருந்த ஆய்வாளர் பிரதாப் சந்திரன், கையில் குழந்தையை வைத்திருந்த ஷைமோலை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளார். தான் மூன்று மாத கர்ப்பிணி என்று அவர் கதறிய போதிலும், ஆய்வாளர் அதனைப் பொருட்படுத்தாமல் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது அந்தப் பெண் பெற்றுள்ள இந்த ஆதாரங்கள், கேரள காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.