அமெரிக்காவின் மினியாபோலிஸ் (Minneapolis) நகரில், குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகள் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை நள்ளிரவில் பனி மூடிய சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, அவர் மீது முழங்காலிட்டு அழுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே அதிர வைத்துள்ளது.

“Operation Metro Surge” என்ற அதிரடி சோதனையின் போது, வாகனத்தை மறித்த அதிகாரிகள் அந்தப் பெண்ணைப் பலவந்தமாகத் தரைக்கு இழுத்து வந்தனர். அங்கிருந்த மக்கள் “அவர் ஒரு கர்ப்பிணி, அவரை விடுங்கள்” என்று கத்தியும், அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணின் வயிற்றுப் பகுதியை அழுத்தித் தரைநோக்கிப் பிடித்துள்ளனர்.

இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து மினியாபோலிஸ் நகரக் காவல் துறைத் தலைவர் பிரையன் ஓஹாரா (Brian O’Hara) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “எங்கள் அதிகாரிகள் நிலைமையைக் கையாளப் பயிற்சி பெற்றுள்ளனர், ஆனால் மத்திய அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் மினியாபோலிஸில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அங்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது அதிகாரிகள் பெப்பர் ஸ்ப்ரே மற்றும் டேசர்களைப் பயன்படுத்தியதும் கூடுதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.