அமெரிக்காவைச் சேர்ந்த மைனிதா என்ற இளம்பெண், ‘பிரவுன் ரிக்லூஸ்’ எனப்படும் ஒரு வகை நச்சுச் சிலந்தி கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்ட தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் எதிர்பாராத விதமாகச் சிலந்தி கடித்த சில நிமிடங்களிலேயே, நடக்க முடியாமலும் சுயமாக உணவு உண்ண முடியாமலும் அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயத் துடிப்பு மிக அதிகமாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அபாயகரமான அளவிற்கும் குறைந்ததால் பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையிலும், அந்தச் சிலந்தி நச்சின் பாதிப்பால் அவரது உடலில் உள்ள தோல்கள் பாம்பின் சட்டையை உரிப்பது போலப் பெரிய தாள்களாக உரியத் தொடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
New fear unlocked: She was bitten by a brown recluse spider, and this is how her body reacted to it.
byu/mindyour inTikTokCringe
இது குறித்து தில்லி ஜிவிஷா கிளினிக்கின் முதன்மை தோல் மருத்துவர் டாக்டர் ஆக்ரிதி குப்தா கூறுகையில், இந்த வகைச் சிலந்தியின் நச்சில் உள்ள என்சைம்கள் தோலில் உள்ள செல்கள் மற்றும் நுண் ரத்த நாளங்களைச் சிதைப்பதால் திசுக்கள் இறக்கத் தொடங்கும் என்று விளக்குகிறார். ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் இந்தத் திசு அழிவு காரணமாகவே தோல் அவ்வாறு உரியத் தொடங்குகிறது என்றும், இது குணமடைவதற்கான ஒரு அறிகுறிதான் என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக இந்தச் சிலந்தி கடியால் உயிரிழப்பு ஏற்படுவது அரிது என்றாலும், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிலந்தி கடித்த இடத்தில் நிறம் மாறுதல், கடும் வலி அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவ உதவியை நாடுவது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
