நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ‘சஹானா சஹானா’ பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நிதி அகர்வால், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நிலைகுலைந்தார்.

அவரைப் பார்ப்பதற்காகவும் செல்ஃபி எடுப்பதற்காகவும் முண்டியடித்த ஆண்கள் கூட்டம், பாதுகாப்பையும் மீறி அவரை நெருக்கித் தள்ளியதால் அவர் பெரும் அசௌகரியத்திற்கு ஆளானார்.

நிதி அகர்வால் மிகுந்த மன உளைச்சலுடனும் பயத்துடனும் தனது காரை நோக்கிச் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள பின்னணிப் பாடகி சின்மயி, நிதி அகர்வாலைச் சூழ்ந்து கொண்ட கூட்டத்தை “ஓநாய்களை விட மோசமானவர்கள்” எனச் சாடியுள்ளார்.

பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் இத்தகைய ஆண்களை “வேறு கிரகத்தில் கொண்டு போய் விட்டுவிடக் கூடாதா?” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஹாரர்-காமெடி திரைப்படம், 2026 ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத் தயாரிப்பு குழுவினர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.