ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சித் தலைவர் விஜய் தனது உரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க காலிங்கராயனை தொடக்கம் முதல் இறுதிவரை புகழ்ந்து பேசினார். ஈரோடு மாவட்டத்தின் விவசாய வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் காலிங்கராயன் அணை மற்றும் கால்வாயை அவர் சிறப்பித்தார்.
விஜய் தனது உரையில், “ஈரோடு மக்களின் விவசாயத்துக்கு கவசமாக இருப்பது காலிங்கராயன் அணையும் கால்வாயும். இதனை அமைக்கும் போது காலிங்கராயன் சோர்வடைந்தபோது, அவரது தாய் தயிர் மற்றும் மோர் விற்று சேமித்த பணத்தை வழங்கி, ‘அதை எடுத்துக் கொண்டு போய் கால்வாய் வெட்டு’ என ஊக்கமளித்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய காலிங்கராயனின் மக்கள் மீதான அக்கறை இன்றைய ஆட்சியாளர்களிடம் இல்லை” என குறிப்பிட்டார்.
மேலும், காலிங்கராயன் பவானி ஆற்றில் அணை கட்ட இடம் தேர்வு செய்யச் சென்றபோது அங்கு அமர்ந்திருந்த பாம்பு சென்ற பாதையிலேயே கால்வாய் வெட்டப்பட்டதாகவும், அந்த இடத்தில்தான் அணை கட்டத் தொடங்கியதாகவும் சில வாய்மொழிக் கதைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி ஆற்றின் துணை ஆறான பவானி ஆற்றின் குறுக்கே, பவானி மற்றும் நொய்யல் ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறைக்கு அருகே அமைந்துள்ளதே காலிங்கராயன் அணை. இங்கிருந்து புறப்படும் கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்தி வருகிறது.
பாண்டிய நாட்டின் கொங்கு மண்டலத்தில் தளபதியாகவும் சிற்றரசராகவும் இருந்த காலிங்கராயன், 1271ஆம் ஆண்டு கால்வாய் கட்டுமான பணியைத் தொடங்கி, 1283ஆம் ஆண்டு அதை நிறைவு செய்தார். கால்வாய் தன் சொந்த நிலத்திற்கு பயன்படுமாறு அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, கால்வாய் நீரை தானோ, தனது குடும்பமோ, சந்ததியினரோ பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி கூறி, கோயம்புத்தூரை அடுத்த ஊத்துக்குளி பகுதிக்கு குடிபெயர்ந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
இன்றும் ஈரோடு மாவட்டத்தை மூப்போக சாகுபடிக்கு உதவும் கால்வாயாக காலிங்கராயன் கால்வாய் விளங்கினாலும், அந்தப் பகுதியை அவரது குடும்பம் அனுபவிக்கவில்லை. தற்போது கோயம்புத்தூரில் வசிக்கும் அவரது குடும்பத்தின் வாரிசு ஒருவர் தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக விளங்குகிறார்.
அந்த நடிகர், விஜய்க்கு வில்லனாகவும் தந்தையாகவும் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்யராஜின் தாயார் நாதாம்பாள், காலிங்கராயன் மன்னரின் 36வது தலைமுறை வாரிசு என கூறப்படுகிறது. இதனை சத்யராஜ் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தாலும், ஒருமுறை அளித்த பேட்டியில் அதை ஒப்புக்கொண்டுள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த காலத்தில், சிவகுமார் மூலம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சின்னப்ப தேவரிடம் அறிமுகமான போது, தனது குடும்ப பின்னணியை தெரிவித்ததன் காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனாலேயே பின்னர் தன்னை மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவர் என வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும் சத்யராஜ் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனால், ஈரோட்டின் வளத்துக்குக் காரணமான காலிங்கராயனின் வாரிசு இன்று தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
