இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கவும், கட்டண வசூலை எளிமையாக்கவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் ‘எம்.எல்.எப்.எப்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த டிஜிட்டல் கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ், வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும் போதே அவற்றின் நம்பர் பிளேட்டுகள் செயற்கைக்கோள் மற்றும் ஏ.ஐ மூலம் அடையாளம் காணப்பட்டு, ஃபாஸ்டேக் வழியாகக் கட்டணம் தானாகவே வசூலிக்கப்படும். பி இந்த நவீன முறையினால் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், பயண நேரம் மிச்சமாவதுடன் எரிபொருளும் பெருமளவில் சேமிக்கப்படும்.
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்றும், அரசின் வருவாய் 6,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஏற்கனவே ஃபாஸ்டேக் அறிமுகத்திற்குப் பிறகு காத்திருப்பு நேரம் 60 வினாடிகளுக்கும் குறைவாகக் குறைந்துள்ள நிலையில், இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் போக்குவரத்துத் துறையில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
