ஹைதராபாத்தில் உள்ள வீணாரணி சாகலி ஐலம்மா மகளிர் பல்கலைக்கழகத்தில் (கோட்டி மகளிர் கல்லூரி) சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அப்போது படக்குழுவைச் சேர்ந்த சிலர், அங்கு பயிலும் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளது. படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகவும், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி, சில மாணவிகளிடம் படக்குழுவினர் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளமான ‘X’ தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை கண்ணீருடன் விவரிக்கும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி கற்கும் இடத்தில் இது போன்ற அத்துமீறல்கள் நடப்பது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சர்ச்சை குறித்து படக்குழுவோ அல்லது நடிகர் சிவகார்த்திகேயன் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவி வருவதால், காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.