ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, உயிரிழந்த தனது எஜமானரின் உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாயின் நெஞ்சை உருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டத்தின் போது சஜித் அக்ரம் நடத்திய இந்தத் தாக்குதலில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வளர்ப்பு நாயான ‘மௌயி’ என்ற பெர்னீஸ் மவுண்டன் நாய், துப்பாக்கிச் சத்தங்களுக்கு மத்தியிலும் தனது எஜமானரின் உடலருகே நின்று பாதுகாப்பாக நின்றிருப்பது அனைவரையும் கண்கலங்கச் செய்துள்ளது.

தாக்குதலின் போது சிதறி ஓடிய கூட்டத்திற்கு மத்தியில் அந்த நாய் பதற்றத்துடன் ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, காணாமல் போன அந்த நாயைத் தேடும் பணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இறுதியில் அந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டு, உயிரிழந்தவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. எஜமானருக்கு அந்த நாய் காட்டிய விசுவாசம், இந்தத் துயரச் சம்பவத்திலும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கப்படுகிறது.