இந்தியாவின் பிரபல சமூகத் தொழில் முனைவோர் நிறுவனமான ‘UnLtd India’-வின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அன்ஷு பார்டியா, விமானப் பயணங்களின் போது வழங்கப்படும் உணவுகள் வீணாவதைத் தடுக்கத் தான் பின்பற்றும் ஒரு எளிய பழக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.
விமானங்களில் மீதமாகும், குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தயிர், பன் மற்றும் வெண்ணெய் போன்றவை குப்பையில் வீசப்படுவதை அறிந்த அவர், அவற்றை வீணாக்காமல் தனது கைப்பையில் எடுத்துச் சென்று தேவைப்படுவோருக்கு வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம் இருந்தாலும், உணவு வீணாவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின் போது, சக பயணி ஒருவரும் இதே போன்று உணவைச் சேகரித்ததைக் கண்டு தான் நெகிழ்ந்ததாக அன்ஷு குறிப்பிட்டுள்ளார்.
விமானப் பணியாளர் ஒருவரும் அவர்களுக்கு உதவி செய்துள்ளார். “மூடப்பட்ட உணவுப் பொட்டலங்களை குப்பையில் போடுவதற்குப் பதில், யாருக்காவது வழங்குவது ஒருவரின் நாளை மகிழ்ச்சியாக்கும்” என்று கூறும் அவர், இது குறித்து விமான நிறுவனங்களும், விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் (DGCA) பயணிகளுக்குச் சிறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரது இந்த LinkedIn பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இத்தகைய “விழிப்புணர்வு மிக்கச் செயலை” (Mindfulness) தாங்களும் பின்பற்றப் போவதாகப் பாராட்டி வருகின்றனர்.
