சமீபத்தில், நவி மும்பையின் பேலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபமான நிலையில் காணப்பட்ட ஒரு வயதானப் பெண்மணி, தானே மறைந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியின் மனைவி என்று கூறிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

ரேகா ஸ்ரீவஸ்தவா என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், ஒரு காலத்தில் தான் துபாயில் ஒரு விமான நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிரமத்திற்கு உள்ளாகித் தெருவில் வாழும் நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ பொதுமக்களிடையேப் பரந்த அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்தப் பெண்மணியின் இந்தக் கூற்றுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜாம்நகரில் வசிக்கும் சலீம் துரானியின் குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது நம்பகமான கிரிக்கெட் ஆவணங்களிலிருந்தோ ரேகா ஸ்ரீவஸ்தவா என்ற மனைவி பற்றிய எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

2023 ஏப்ரலில் மறைந்த சலீம் துரானியின் வாழ்க்கை வரலாற்றில் கூட, துபாய் திருமணமோ அல்லது தொழில் தொடர்புகளோ பற்றியக் குறிப்புகள் இல்லை.

இதனால், இந்தப் பெண்மணியின் கூற்று உண்மையானதா அல்லது ஒரு தனிப்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடா என்பது குறித்தக் கேள்விகள் நீடிக்கின்றன.